Saturday 21 November 2009

[பாடம்-71] நற்பண்புகள்.

அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதை உள்ளவர் யார்?

2007. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை'' என்றார்கள். இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவரும் தம் பெற்றோரை ஏசக் கூடாது.

2008. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் : ''ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)'' என்றார்கள்.

உறவை முறிக்கும் பாவத்திற்கான தண்டனை.

2009. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

உறவைப் பேணி வாழ்பவருடன் அல்லாஹ்வும் உறவு பாராட்டுகிறான்.

2010. உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) 'உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்'' என்று கூறினான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

உறவைப் பசுமையாக்க வேண்டும்.

2011. அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவித்தார் : இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர்; என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும் தாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்களின் வழியாக வரும் அன்பஸா இப்னு அப்தில் வாஹித்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், நபி(ஸல்) அவர்கள், 'ஆயினும் அவர்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்து போகவிடாமல்) பசுமையாக்குவேன்'' என்று கூறினார்கள் என அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளது. அதாவது, 'அவர்களின் உறவைப் பேணி நடந்து கொள்வேன்'' என்றார்கள்.

பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுகிறவர் அல்லர்.

2012. பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

(ஒருவர் தம்) குழந்தைகளின் மீது அன்பு காட்டுவதும் அவர்களை முத்தமிட்டு அணைத்துக் கொள்வதும்.

2010. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை'' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் கருணை அளவிடவியலாது.

2011. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார் : (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!'' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது'' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்'' என்று கூறினார்கள்.

அல்லாஹ் தன் அன்பை நூறு பாகங்களாகப் பங்கிட்டான்.

2012. அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

தொடையின் மீது சிறு குழந்தையை வைத்துக்கொள்வது.

2013. (நபி(ஸல்) அவர்களின் வளர்ப்புப் பேரரான) உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தம் ஒரு தொடையின் மீதும் (தம் சொந்தப் பேரரான) ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்களைப் பிடித்து தம் இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, 'இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்களின் மீது அன்பு செலுத்துவாயாக!'' என்றார்கள்.

மனிதர்களிடமும் மிருகங்களிடமும் அன்பு காட்டுவது.

2017. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றார்கள். அவர்களுடன் நாங்கள் நின்றோம். அப்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒரு கிராமவாசி, 'இறைவா! எனக்கும் முஹம்மது அவர்களுக்கும் (மட்டும்) அருள் புரிவாயாக! எங்களுடன் வேறு யாருக்கும் அருள் புரியாதே!'' என்று பிரார்த்தித்தார். (தொழுது முடித்து) நபி(ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தபோது அந்தக் கிராமவாசியிடம், 'விசாலமானதை, அதாவது இறைவனின் அருளை நீ குறுக்கி விட்டாயே!'' என்று கூறினார்கள்.

2018. ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதை நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

2019. ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

2020. (படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்பட மாட்டார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

2021. அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவனுடைய பாவத்தின் நிலை.

2022. அபூ ஷுரைஹ்(ரலி) அறிவித்தார் : ''அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்'' என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்'' என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம்.

2023. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நற்செயல்கள் அனைத்தும் தர்மமே.

2024. 'எல்லா நற்செயலும் தர்மமே' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுதல்.

2025. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார்: யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸாமு அலைக்கும்' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு 'வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (-அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)'' என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்'' என்று கூறினார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான்தான் 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லி விட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)'' என்று கேட்டார்கள்.

இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பது.

2026. (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் 'யாசித்தபடி' அல்லது 'ஒரு தேவை நிமித்தமாக' வந்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களை நோக்கி '(இவருக்காக என்னிடம்) பரிந்துரையுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் அளிக்கப்படும். அல்லாஹ், தான் நாடியதை தன்னுடைய தூதரின் நாவினால் நிறைவேற்றுவானாக'' என்றார்கள் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ அருவருப்பாகப் பேசும் பழக்கமுடையவராக இருக்கவில்லை.

2027. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட 'அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும்'' என்றே கூறுவார்கள்.

நற்பண்பும், தயாளகுணமும், வெறுக்கப்பட்ட கருமித்தனமும்.

2028. முஹம்மத் இப்னு முன்கதிர்(ரஹ்) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் 'இல்லை' என்று சொன்னதில்லை என ஜாபிர்(ரலி) கூறக் கேட்டேன்.

2029. அனஸ்(ரலி) அறிவித்தார் : நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை 'ச்சீ'' என்றோ, '(இதை) ஏன் செய்தாய்'' என்றோ, 'நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?' என்றோ அவர்கள் சொன்னதில்லை.

ஏசுவதற்கும் சபிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை.

2030. ஒருவர் மற்றவரை 'பாவி' என்றோ, 'இறைமறுப்பாளன்' என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ தர்(ரலி) அறிவித்தார்.

2031. இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறவர், தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். தனக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வது(ம், அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும்) எந்த மனிதனுக்கும் தகாது. எதன் மூலம் தம்மைத்தாமே தற்கொலை செய்துகொள்ளும் ஒருவர் அதன் மூலம் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று அவதூறு சொல்வதும் அவரைக் கொலை செய்வது போன்றதேயாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதை அந்த மரத்தினடியில் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்களில் ஒருவரான ஸாபித் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அறிவித்தார்.

கோள் சொல்வது பெரும்பவாங்களில் ஒன்றாகும்.

2032. ஹம்மாம் இப்னு ஹாரிஸ்(ரஹ்) அறிவித்தார் : நாங்கள் ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்களிடம் '(இங்குள்ள) ஒருவர் (நமக்கிடையே நடக்கும்) உரையாடல்களை (கலீஃபா) உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் போய்ச் சொல்கிறார்'' என்று கூறப்பட்டது. அப்போது ஹுதைஃபா(ரலி) 'கோள் சொல்கிறவன் சொர்க்கம் செல்லமாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

(யாரையும் அளவு கடந்து) புகழ்வது வெறுக்கப்படட செயலாகும்.

2033. அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார் : ஒரு மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஒருவர் அவரைப் பற்றிப் புகழ்ந்துரைத்தார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'உனக்குக் கேடுதான். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீரே!'' என்று பல முறை கூறினார்கள். பிறகு, 'உங்களில் ஒருவர் (தம் சகோதரரைப்) புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், '(அவர் குறித்து) நான் இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்' என்று (மட்டும்) அவர் கூறட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகச் கருதினால் மட்டுமே கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். அல்லாஹ்வை முந்திக் கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று (யாரும்) கூற வேண்டாம். காலித் இப்னு மஹ்ரான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், '(நபி(ஸல்) அவர்கள் தம் முன் புகழ்ந்தவரைப் பார்த்து) உனக்கு அழிவுதான்'' என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

பொறாமையும் பிணக்கும் தடை செய்யப்பட்டவையாகும்.

2034. (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2035. ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

அனுமதிக்கப்பட்ட சந்தேகம்.

2036. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : ''இன்னாரும் இன்னாரும் நம்முடைய மார்க்கத்தில் எதையும் அறிந்ததாக நான் கருதவில்லை'' என்று (இருவரைப் பற்றி) இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) லைஸ்(ரஹ்) கூறினார்: அவர்கள் இருவரும் நயவஞ்சகர்களாய் இருந்தனர். ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, 'ஆயிஷா! இன்னாரும் இன்னாரும் நாம் எந்த மார்க்கத்தில் இருக்கிறோமோ அதை அறிந்திருப்பவர்களாக நான் கருதவில்லை'' என்று கூறினார்கள்.

இறைநம்பிக்கையாளர் தாம் புரிந்துவிட்ட பாவங்களை (பகிரங்கப்படுத்தாமல்) மறைப்பது.

2037. என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகிறவர்களைத் தவிர ஒருவர் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனுடைய பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க, 'இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்'' என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(மனஸ்தாபம் கொண்டு) பேசாமல் இருப்பதும், 'தம் சகோதரிடம் மூன்று நாள்களுக்கு மேல் ஒருவர் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று'

2038. ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.

பொய் தடை செய்யப்பட்டிருப்பது.

2039. உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

மன வேதனையின்போது பொறுமை காப்பது.

2040. மன வேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்து விடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு 'யாருமில்லை' அல்லது 'ஏதுமில்லை' மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். (ஆனால் அவனோ அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

கோபத்தைத் தவிர்த்தல்.

2041. மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2042. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'எனக்கு அறிவுரை கூறுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'கோபத்தைக் கைவிடு'' என்று (அறிவுரை) கூறினார்கள். அவர் (''அறிவுரை கூறுங்கள்'' எனப்) பல முறை கேட்டபோதும் நபி(ஸல்) அவர்கள் 'கோபத்தைக் கைவிடு'' என்றே சொன்னார்கள்.

நாணம்.

2043. அபுஸ் ஸவ்வார் அல்அதவீ(ரஹ்) அவர்கள் கூறினார்: இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள், 'நாணம் நன்மையே தரும்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று கூறினார்கள். அப்போது புஷைர் இப்னு கஅப்(ரஹ்) அவர்கள், 'நாணத்தில் தான் கம்பீரம் உண்டு; நாணத்தில் தான் மன அமைதி உண்டு எனத் தத்துவ(ப் புத்தக)த்தில் எழுதப்பட்டுள்ளது'' என்று கூறினார். அப்போது அவரிடம் இம்ரான்(ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (கூறியது) பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் ஏட்டில் உள்ளவை குறித்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே! என்று கேட்டார்கள்.

நாணம் இல்லையேல் நாடியதைச் செய்து கொள்.

2044. மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது) மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான். 'உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்'' என்பதும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

மக்களுடன் மலர்ச்சியாகப் பழகுவதும் குடும்பத்தாருடன் நயமாக நடந்து கொள்வதும்.

2045. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் 'அபூ உமைரே! பாடும் உன்னுடைய சின்னக்குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?' என்று கூடக் கேட்பார்கள்.

இறை நம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்பட மாட்டார்.

2046. இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கவிதை, யாப்பிலக்கணப் பாடல் (ரஜஸ்), ஒட்டகப் பாட்டு (ஹுதாஃ) ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டதும் வெறுக்கப் பட்டதும்.

2047. நிச்சயமாகக் கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார்.

இறை தியானம், கல்வி, இறை வேதம் ஆகியவற்றிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் அளவுக்கு மனிதன் மீது கவிதையின் ஆக்கிரமிப்பு இருப்பது வெறுக்கப்பட்டதாகும்.

2048. உங்களில் ஒருவரின் வயிறு கவிதையால் நிரம்பியிருப்பத விடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நேசிப்போருடன் மறுமையில்...

2049. அனஸ்(ரலி) அறிவித்தார்: கிராமவாசிகளில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! மறுமை நாள் எப்போது சம்பவிக்கும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்கென்ன கேடு! அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்?' என்று கேட்டார்கள். அவர் 'நான் அதற்காக (ஏதும்) முன்முயற்சி செய்யவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்'' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், '(அப்படியானால்,) நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களுடன் (மறுமையில்) இருப்பாய்!'' என்றார்கள். உடனே நாங்கள், 'நாங்களும் அவ்வாறுதானா?' என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்'' என்றார்கள். (இதைக் கேட்டு) அன்று நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம்.-அப்போது முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களின் அடிமை (எங்களைக்) கடந்து சென்றார்கள். அவர் என் வயதொத்த (சிறு)வராக இருந்தார். ''இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே மறுமை சம்பவிக்கும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அதாவது அவ்வளவு நெருக்கத்தில் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்.)இந்த ஹதீஸை ஷுஅபா(ரஹ்) அவர்கள் கத்தாதா(ரஹ்) அவர்கள் வழியாக அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து சுருக்கமாக அறிவித்தார்கள்.

(மறுமையில்) மனிதர்கள் தம் தந்தையர் பெயருடன் (இணைத்து) அழைக்கப்படுவர்.

2050. மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு 'இது இன்னாருடைய மகன் இன்னோரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)'' என்று கூறப்படும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''கண்ணியத்திற்குரியது ('அல்கர்ம்') இறைநம்பிக்கையாளரின் இதயமே'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.

2051. மக்கள் (திராட்சைப் பழத்திற்கு) 'அல்கர்ம்' (கண்ணியமானது) என்று சொல்கின்றனர். உண்மையில் இறைநம்பிக்கையாளரின் இதயமே 'அல்கர்ம்' (கண்ணியத்திற்குரியது) ஆகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒரு பெயரை அதைவிடச் சிறந்த பெயராக மாற்றியமைப்பது.

2052. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ஸைனப்(ரலி) அவர்களுக்கு (முதலில்) பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது 'அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்'' என்று (மக்களால்) சொல்லப்பட்டது. எனவே, அவருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'ஸைனப்' என்று பெயர் சூட்டினார்கள்.

நண்பரின் பெயரில் சில எழுத்துக்களைக் குறைத்து (சுருக்கமாக) அழைப்பது.

2053. அனஸ்(ரலி) அறிவித்தார் : (ஒரு பயணத்தில் என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் பயணப் பொருட்களுடன் (அவற்றின் காவலராக) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அடிமையான 'அன்ஜஷா' (நபியவர்களுடைய) துணைவியரின் ஒட்டகங்களைப் பாட்டுப் பாடி ஓடச் செய்து கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அன்ஜஷ்! நிதானமாக ஓட்டிச் செல்! (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்து விடாதே!'' என்றார்கள்.

அல்லாஹ்வின் கோபத்திற்குரிய பெயர்.

2054. மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகவும் அருவருப்பான பெயர், (உலகில்) ஒருவர் தமக்கு 'மன்னாதி மன்னன்' (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக் கொண்டதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்வது.

2055. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களுக்கருகில் இரண்டு மனிதர்கள் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி(ஸல்) அவர்கள் ('யர்ஹமுகல்லாஹ் - அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக' என்று) மறுமொழி கூறினார்கள். மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லை. அப்போது அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டது. அதற்கவர்கள், 'இவர் (தும்மியவுடன்) 'அல்ஹம்துலில்லாஹ்' என்று இறைவனைப் புகழ்ந்தார். அவர், 'அல்ஹம்துலில்லாஹ்' என்று இறைவனைப் புகழவில்லை. (எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். அவருக்கு மறுமொழி பகரவில்லை)'' என்று பதிலளித்தார்கள்.

தும்மல் விரும்பத்தக்கது கொட்டாவி விரும்பத்தகாதது.

2056. அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு ('யர்ஹமுக்கல்லாஹ் - அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்' என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும். ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், யாரேனும் (கட்டுப்படுத்தாமல்) 'ஹா' என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1 comments:

sultangulam@blogspot.com said...

ஹதீஸ் எண்களில் 2012க்கு பிறகு 2010 எனத் துவங்குகிறதே

Post a Comment