Monday 23 November 2009

[பாடம்.-72] அனுமதி வேண்டுதல்.

சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கு (முதலில்) சலாம் சொல்வது.

2057. சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கு (முதலில்) சலாம் சொல்வது.

2058. வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் சொல்லட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அறிமுகமானவருக்கு அறிமுகமில்லாதவருக்கும் சலாம் சொல்வது.

2059. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் : ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.

(பார்க்கக் கூடாததைப்) பார்க்க நேரும் என்பதாலேயே (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோருதல் (சட்டமாக்கப்பட்டது).

2060. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் ஒரு துவாரத்தின் வழியாக ஒருவர் எட்டிப்பார்த்தார். நபி(ஸல்) அவர்களுடன் ஈர்வலிச் சீப்பு ஒன்று இருந்தது. அதனால் தம் தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள், 'நீ (துவாரத்தின் வழியாகப்) பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணில் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது'' என்றார்கள்.

மர்ம உறுப்பு அல்லாத (மற்ற) உறுப்புகளின் விபச்சாரம்.

2061. விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல. கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது அல்லது பொய்யாக்குகிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

சிறுவர்களுக்கு சலாம் சொல்வது.

2062. ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (ஒரு முறை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்'' என்று கூறினார்கள்.

(கதவைத் தட்டுபவரிடம் வீட்டுக்காரர்) 'யார் அது?' என்று கேட்க, அவர் 'நானே'' என்று கூறுவது.

2063. ஜாபிர்(ரலி) அறிவித்தார் : என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், 'யார் அது?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'நான்தான்'' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நான் நான் என்றால்...?' என அதை விரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள்.

''இறைநம்பிக்கையாளர்களே! சபைகளில் 'நகர்ந்து இடம் கொடுங்கள்'' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடம் கொடுப்பான். மேலும், (சபையிலிருந்து) கலைந்து சென்றுவிடுங்கள் என்று கூறப்பட்டால், அவ்வாறே கலைந்து விடுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 58:11 வது) இறைவசனம்.

2064. இப்னு உமர்(ரலி) கூறினார்: ஒருவர், அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பி விடப்பட்டு, அந்த இடத்தில் மற்றொருவர் அமர்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இதற்கு மாறாக, 'நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்'' என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறினார்:) ஒருவர் தம் இடத்திலிருந்து எழுந்து கொண்டு, அந்த இடத்தில் (மற்றவரை) உட்காரவைப்பதை இப்னு உமர்(ரலி) அவர்கள் வெறுத்தார்கள்.

முழங்காலில் கையைக் கட்டிக்கொண்டு குத்துக்காலிட்டு அமர்தல். இதுவே ('அல்இஹ்திபா' அல்லது) 'குர்ஃபுஸா' எனப்படும்).

2065. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் முற்றத்தில் தம் கையை (முழங்காலில்) கட்டிக்கொண்டு குத்துக்காலிட்டு இவ்வாறு அமர்ந்திருந்ததைக் கண்டேன்.

மூன்று பேரை விட அதிகமானோர் இருக்கும்போது (இருவர்) இரகசியம் பேசுவதும் உரையாடுவதும் தவறாகாது.

2066. நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்; நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும் வரை! ஏனெனில், (அவ்வாறு மூன்று பேர் இருக்கும்போது இருவர் மட்டும் பேசுவது) மூன்றாமவரை வருத்தமடையச் செய்யும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

உறங்கச் செல்லும்போது வீட்டிலுள்ள (அடுப்பு மற்றும் விளக்கின்) நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடலாகாது.

2067. அபூ மூஸா(ரலி) அறிவித்தார் : மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர். அவர்களின் நிலை குறித்து நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது 'நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். எனவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்'' என்றார்கள்.

கட்டடங்கள் தொடர்பாக வந்துள்ளவை.

2068. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நான் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மழையிலிருந்து என்னைக் காக்கின்ற, வெயிலிருந்து எனக்கு நிழல் தருகிற ஒரு வீட்டை நானே என் கரத்தால் கட்டியதை (இப்போதும்) நினைத்துப் பார்க்கிறேன். அந்த வீட்டைக் கட்ட அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் எனக்கு உதவவில்லை.

1 comments:

mohamedali jinnah said...

அத்தனையும் உள்ளடக்கி அருமையாக ஒரு வலை தருகின்றீர்கள் .
உங்கள் சேவை தேவை . நானும் எடுத்து மற்றவருக்கு கொடுக்கவா! அனுமதி வேண்டுதல்.

Post a Comment